விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி
அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வினால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார்.இன்று வியாழக்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் விலை உயர்வு, பால்மா விலை அதிகரிப்பு, எரிவாயு மற்றும் மின்கட்டண உயர்வு போன்ற அத்தியாவசிய செலவுகள் மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்தார்.குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் பல கிராமப்புற மற்றும் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல், சீனன்வெளி, நல்லூர் உள்ளிட்ட பகுதிகளும், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாட்டாளிபுரம், சூடைக்குடா, கூனித்தீவு, கடற்கரைச்சேனை, கங்குவேலி ஆகிய கிராமங்களும், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திரியாய், தென்னைமரவாடி, புல்மோட்டை, இறக்கக்கண்டி மற்றும் கிண்ணியா கரையோரப் பகுதிகளிலும் வாழும் மக்கள் இந்த விலைவாசி உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.மேலும் இவ்விலை உயர்வு விவசாயத் துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால் விவசாயிகளும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்றார்.எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments
Post a Comment