அநுராதபுர சிறுமிக்கு நீதி கோரி மட்டக்களப்பில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்

(வடமலை ராஜ்குமாா்) அநுராதபுரத்தில் பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி கோரி, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அனைத்து தரப்பினரிடமும் பகிரங்க கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இன்று (27) மட்டக்களப்பு காந்தி பூங்கா பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 12 இன் அடிப்படையில் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்றும், அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 1995ஆம் ஆண்டு 22ஆம் இலக்க திருத்தச்சட்டத்தின் கீழ், 16 வயதிற்குட்பட்ட சிறுமியைக் கட்டாயப்படுத்தியோ அல்லது சம்மதத்துடனோ பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவது பாரதூரமான குற்றமாகக் கருதப்படுவதுடன், அதற்கான கடுமையான தண்டனைகளும் நட்டஈடும் வழங்கப்பட வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று, 1979ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1997ஆம் ஆண்டு பிணைச் சட்டத்தின் அடிப்படையில், இத்தகைய பாலியல் குற்றங்கள் பிணை வழங்கப்படாத குற்றங்களாகக் கருதப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய குற்றங்களுக்கு பாரபட்சமின்றி சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. அறிக்கையில் மேலும், வணக்கத்தலங்கள் மக்கள் பாதுகாப்பிற்கும் அடைக்கலத்திற்குமான இடங்களாக இருக்க வேண்டும் என்றும், மதத்தின் பெயரை பயன்படுத்தி குற்றங்களை மறைக்கும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. “சமூக அந்தஸ்து, அரசியல் அதிகாரம் அல்லது மதத் தலைமைத்துவம் என்பனவற்றின் பெயரில் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கக் கூடாது. சட்ட ஆட்சியை நிலைநிறுத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்” என வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு வலியுறுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

திருகோணமலையில் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

பேராசிரியர் பாலசுகுமாரின் எட்டு நூல்களின் அறிமுகமும், வெளியீடும்

உதயபுரியில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் கோலாகலம்.